செங்கல்பட்டு, ஜூலை 14: நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டின் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அதன் வாடிக்கையாளருக்கு ரூ. 10,000 நஷ்டஈடு வழங்கும்படி செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஏ.ரத்தினவேலு உத்தரவிட்டார்.
செங்கல்பட்டை அடுத்த பி.வி களத்தூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.விநாயகமூர்த்தி. இவர் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஏஎன்ஓபி மோட்டார் ஆட்டோ கன்சல்டண்ட் மூலமாக 19-4-2004ல் பச21-ண-8214 எண்ணுள்ள ஸ்பிலென்டர் மோட்டார் சைக்கிளை ரூ 44,000 விலையில் வாங்கினார். தொடக்கத்தில் ரூ.15000 முன்பணமாகச் செலுத்தியதுடன் மீதமுள்ள பணத்துக்கு சென்னை தி.நகர் அசோக் லேலண்ட் பைனான்ஸ் லிட்., நிதி நிறுவனத்திடம் ரூ. 3000 பதிவு செலவுக்காகச் செலுத்தியதுடன் மீதமுள்ள தொகையை மாதம் ரூ.1618 வீதம் 23 தவணையாகச் செலுத்தி 8-4-2006ல் பாக்கி முழுவதையும் செலுத்தியுள்ளார்.
தவணை முழுவதும் செலுத்தியும் பாக்கி ஏதும் இல்லை என்ற ஆவணத்தையும் மோட்டார் சைக்கிளின் ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் புத்தகம் மற்றும் வாகனத்தின் சாவியோ கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வாடிக்கையாளர் மேற்படி ஆவணங்களை தரும்படி தொடர்ந்து கேட்டும் கொடுக்கப்படாததால் மன உளைச்சல் அடைந்தார். சம்பந்தப்பட்டவர்கள் நஷ்டஈடாக ரூ. 25000 வழங்க வேண்டும் எனக் கோரி செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ரத்தினவேலு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மோட்டார் சைக்கிளின் ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் பாலிஸி மற்றும் வாகனத்தின் சாவியையும் ஒரு மாதத்தில் வழங்கும்படி உத்தரவிட்டார். மேலும் மோட்டார் ஆட்டோ கன்சல்டன்சி உரிமையாளர் மற்றும் அசோக் லேலண்ட் நிதி நிறுவன மேலாளரும் தங்கள் சேவை குறைபாட்டின் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விநாயகமூர்த்திக்கு ரூ. 10000 நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் அவர் ஆணை பிறப்பித்தார்.