கடலூர், ஜூலை 23: நகராட்சி குடிநீர் பகிர்மானக் குழாய் சீரமைப்புப் பணி நடைபெறுவதால், கடலூரின் சில பகுதிகளில் ஞாயிறு, திங்கள் (24, 25 தேதிகள்) குடிநீர் விநியோகம் தடைபடும் என்று, நகராட்சி ஆணையர் இளங்கோவன் சனிக்கிழமை அறிவித்தார்.
கடலூர் நகருக்கு திருவந்திபுரம் மலைப் பகுதியில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து கடலூர் திருப்பாப்புலியூர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நகராட்சி குடிநீர் வழங்குகிறது.
திருவந்திபுரத்தில் இருந்து நகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான பகிர்மானக் குழாயில் திடீரென சேதம் ஏற்பட்டது.
மிகவும் பழைய குழாய்களாக இருப்பதாலும், விநியோகிக்கப்படும் குடிநீரில் இரும்புத் தாது கலப்பு அதிகம் இருப்பதாலும், கடலூரில் பகிர்மானக் குழாய்கள் துருப்பிடித்து அடிக்கடி சேதம் அடைகின்றன. கடலூர் கூத்தப்பாக்கம் அருகே பிரதான பகிர்மானக் குழாய் சேதம் அடைந்ததால், குடிநீர் மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை சனிக்கிழமை ஏற்பட்டது.
பகிர்மானக் குழாயை உடனடியாக பழுது பார்க்குமாறு, நகராட்சி பொறியியல் துறைக்கு, ஆணையர் இளங்கோவன் உத்தவிட்டார். ÷பழுதுபார்க்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடலூர் நகரில் மஞ்சக்குப்பம், திருப்பாப்புலியூர் பகுதிகளுக்கு இந்த 2 நாளும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். கடலூர் முதுநகர், சரவணன் நகர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம், வழக்கம்போல் நடைபெறும் என்றும் ஆணையர் கூறினார்.