காஞ்சிபுரம், ஜூலை 23: மத்தியில் காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்குகிறது என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், வெளிநாடுகளில் பதுக்கியிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கக் கோரியும், தீவிரவாதத்தை ஒடுக்க வலியுறுத்தியும் காஞ்சிபுரம் நகர பாஜக சார்பில் வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வணிகர் வீதியில் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்துக்கு காஞ்சிபுரம் நகரத் தலைவர் ஓம்சக்தி எம்.பெருமாள் தலைமை தாங்கினார். இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
காங்கிரஸ் கட்சி நாட்டுக்காகத் தியாகம் செய்த கட்சி என்றும், தலைவர்கள் பலர் உயிர் தியாகம் செய்த கட்சியென்றும் காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி கூறிக் கொள்கின்றனர். மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். அவரைக் கொல்வதற்கு பல நேரங்களில் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் சுதந்திரம் பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். அவரைக் காக்கத் தவறியது காங்கிரஸ் கட்சிதான்.
மும்பை குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு சொல்கிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்காக பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரான திக்விஜய் சிங் மட்டும் இந்தக் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார். இவர் யாரை காப்பாற்ற இப்படி பேசுகிறார் என்பதை காங்கிரஸ் கட்சிதான் விளக்க வேண்டும்.
ராகுல் காந்தியை வருங்காலப் பிரதமர் என்கிறார்கள். அவர் 100 சதவீதம் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்று கூறுகிறார். அவர் பிரதமர் ஆகி என்ன செய்யப்போகிறார்.
எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவில் தீவிரவாதம் தலை தூக்குகிறது.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது தங்களைக் காத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். முத்திரை குத்துகிறார்கள்.
மகாத்மா காந்தியின் நேரடி சீடர்களில் ஒருவர் ஜெயபிரகாஷ் நாராயணன். அவர் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிராக மாணவர் இயக்கத்தை தோற்றுவித்தார். அவர் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர். அவரை அப்போது காங்கிரஸ் கட்சியினர் இவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றார்கள். இப்போது அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராகக் கிளம்பியுள்ளார். அவரையும் ஆர்.எஸ்.எஸ். காரர் என்கிறார்கள்.
இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் மீட்கப்பட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் காஞ்சி நகரத் தலைவர் கே.பூங்காவனம் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன், மாவட்டத் தலைவர் கே.டி.ராகவன், காஞ்சிபுரம் நகரப் பொதுச் செயலர் கே.பரதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.