குடிசை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் பசுமை வீடுகள்

பொன்னேரி, ஜூலை 23: பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதியில் ஏழ்மை நிலையில் குடிசை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்னேரி சட்டப் பேரவ
Published on
Updated on
1 min read

பொன்னேரி, ஜூலை 23: பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதியில் ஏழ்மை நிலையில் குடிசை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ பொன்.ராஜா தெரிவித்தார்.

 பொன்னேரி தாலுகாவில் இருக்கும் மீஞ்சூர், சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அதன் தலைவர் ஜமுனாநந்தன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்.எல்.ஏ பொன்.ராஜா கலந்து கொண்டார்.

 அவரிடம் பொதுமக்கள் கொக்குமேடு, சிங்கிலிமேடு கிராமத்தில் ரேஷன் கடைகள் அமைத்து தருவது, பொன்னேரியில் இருந்து தடப்பெரும்பாக்கம் மற்றும் சிங்கிலிமேடு கிராமத்துக்கு மினி பஸ் வசதி, பழுதடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தருவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

 இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ. பொன்.ராஜா, பழுதடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள் சீரமைத்து தரப்படும், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரேஷன் கடைகளுக்கு கட்டடம் கட்டித்தரப்படும். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் குடிசை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் காற்றோட்ட நிலையில், சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவித்தார்.

 முன்னதாக மீஞ்சூர் ஒன்றிய கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசாத் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிராம சபைக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.