செங்குன்றம், ஜூலை 23: செங்குன்றம் வடகரை சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென ஏற்பட்ட ஓட்டையால் 5000 லிட்டர் டீசல் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை மணலி இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் இருந்து ஆந்திரத்தின் தடாவுக்கு டேங்கர் லாரி டீசல் ஏற்றி கொண்டு சென்றது. மாதவரம் நெடுஞ்சாலை வழியாக வடகரை செங்குன்றம் சந்திப்பு சாலை அருகே வந்தபோது லாரியின் அடிப்பகுதியில் உள்ள போல்ட் நட்டு உடைந்தது. இதனால் டேங்கரில் இருந்த டீசல் வெளியில் பீறிட்டு அடித்தது. உடனே லாரி நிறுத்தப்பட்டு ஓட்டையை அடைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.
தகவலறிந்து விரைந்து வந்த புழல் போலீஸ் உதவி கமிஷனர் கந்தசாமி, செங்குன்றம் இன்ஸ்பெக்டர் கேசவன், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் போக்குவரத்தை சீரமைத்தனர்.
செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சின்னக்கண்ணு தலைமையிலான வீரர்கள், டீசல் கொட்டிக்கிடந்த இடத்தில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீர் அடித்தனர். டேங்கர் லாரியில் இருந்த 5000 லிட்டர் டீசல் வெளியேறி விட்டது, அதனை பொது மக்கள் பலர் கேனில், பாட்டிலில் பிடித்துச் சென்றனர். டேங்கர் லாரி உரிமையாளரான பாடியநல்லூரை சேர்ந்த முருகனிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.