விழுப்புரம், ஜூலை 23: திருக்கோவிலூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு எதிர்க்கட்சித் தலைவரும், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
÷இது குறித்து அவர் செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: திருக்கோவிலூர் 1952 முதல் பேரூராட்சியாகவே உள்ளது. இதன் மக்கள் தொகை ஆண்கள் 15,206 பேரும், பெண்கள் 14,506 பேரும், மற்றவர்கள் 19 பேரும் வசிப்பதாக அரசு கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.
÷ஆனால் இந்த கணக்கெடுப்பைவிட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கே கூடுதலாக வசிக்கிறார்கள்.
÷திருக்கோவிலூர் பேரூராட்சியில் வரி வசூல் மூலம் ஆண்டுதோறும் ரூ.1.40 கோடிக்கும் மேல் கிடைக்கிறது. இருந்தாலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இங்கே முழுமையாக கிடைக்கவில்லை.
÷திருக்கோவிலூர் வட்டம் 140 ஊராட்சிகளையும், 4 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியது. மேலும் இது திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதியின் மையப் பகுதியாகும்.
÷திருக்கோவிலூரைச் சுற்றி கிராமப்புறங்கள் அதிகமாக உள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்காக தினசரி 35 ஆயிரம் மக்களுக்கு மேல் இங்கே வந்து செல்கிறார்கள்.÷அதேபோல் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன. தற்போதுள்ள பேருந்து நிலையம் மிகச் சிறியதாக உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வியாபாரிகளும், மாணவ, மாணவிகளும் தினந்தோறும் அல்லல்படுகின்றனர்.
÷எனவே மேற்படி திருக்கோவிலூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியும், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், மக்கள் பயன்படுகிற வகையிலும் புதிய பேருந்து நிலையத்தை அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.