உத்தரமேரூர், ஜூலை 23: மானாம்பதி கூட்ரோட்டில் நரிக்குறவர் குடியிருப்பில் பஸ் நிலையம், ரேஷன் கடை கட்டித்தருவேன் என்றார் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன்.
உத்தரமேரூர் தாலுகா, பெருநகர் கிராமத்தில் சனிக்கிழமையன்று சமுதாய நலக்கூடத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஒன்றியக் குழு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான எ.அகஸ்தியப்ப முதலியார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் வரவேற்றார். காஞ்சிபுரம் வார்டு கவுன்சிலர் கே.அரங்கநாதன், எஸ்.எல்.என்.எஸ் பஸ் உரிமையாளர் விஜயகுமார், பன்னீர்செல்வம், ஜோஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்துக்கொண்டு பேசியது: மாவட்டத்தில் 700 பஞ்சாயத்துக்கள் உள்ளன. பெருநகர் கிராம சபைக் கூட்டத்துக்குதான் செல்வேன் என்று கூறி வந்துவிட்டேன். ஏனெனில் இங்கு அரசியல் பேதம் கிடையாது.
பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கடந்த ஆண்டு ரூ.9 லட்சம் மதிப்பில் கூடுதல் புதிய கட்டடம் கட்டித் தந்துள்ளேன். மானாம்பதி இந்தியன் வங்கியில் நரிக்குறவர்களுக்கும், கிராமத்தினருக்கும் எந்தவிதக் கடன் உதவியும் தருவதில்லை என்று பொதுமக்கள் கூறினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மானாம்பதி கூட்ரோட்டு குடியிருப்பில் வசிக்கும் நரிக்குறவ மக்களுக்கு பஸ் நிலையம், ரேஷன் கடை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் எம்.பி. விஸ்வநாதன்.
வட்டாட்சியர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.தனபால், உதவித் திட்ட அலுவலர் எம்.சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எம்எல்ஏ பங்கேற்பு
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம் பங்கேற்று பேசினார். அப்போது அக் கிராமத்தின் குறைகளை பொதுமக்கள் மனுக்களாக அளித்தனர்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள், இப் பணிகளை எவ்வாறு சிறப்பாக மேற்கொள்வது, ஊராட்சியின் வரவு செலவுகள், ஊராட்சியில் எந்த வகையிலான வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து இந்த கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மதுராந்தகம்
மதுராந்தகம் ஒன்றியம், அவரிமேடு, முதுகரை ஆகிய ஊராட்சிகளில் சனிக்கிழமை நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.கணிதாசம்பத் பங்கேற்றார்.
தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் மதுராந்தகம் ஒன்றியம், முதுகரை ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மதுராந்தகம் எம்எல்ஏ,எஸ்.கணிதாசம்பத் பங்கேற்றார்.
முதுகரையில் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டி மனுவும், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாகவும் பெற்றார்.
அதனைத்தொடர்ந்து அவரிமேடு ஊராட்சியின் சித்திரவாடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இக் கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர்கள் நசிமா, உதயக்குமார், ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்
மொளச்சூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ பெருமாள் கலந்துக்கொண்டார்.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மாவதி, மில்டன்ஜான்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுமக்கள் விவாதம் நடத்தினர். மேலும் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் மொளச்சூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.