கள்ளக்குறிச்சி, ஜூலை 30: ரிஷிவந்தியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் சார்பில் இடைநின்ற மாணவிகளுக்காக நடைபெறும் கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் மற்றும் கணிதத்தில் செய்முறைப் பயிற்சி வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
உண்டு உறைவிடப் பள்ளியை நடத்தும் ரோஸ் எட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். பிரிவிடையாம்பட்டு பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சு.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் கணக்காளர் வே.இளையராணி வரவேற்றார். அறிவியல் செயல்பாடுகள் குறித்து ஆசிரியை ரெஜினா சாந்தகுமாரி, கணித செயல் பாடுகள் குறித்து ரேணுகா பேசினார்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர் க.அன்பரசு, ஆசிரியர் பயிற்றுனர்கள் பி.சிவக்குமார், தேன்மொழி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நீரின் அழுத்தம், ஆக்ஸிஜனின் தன்மை, மூலிகை தாவரங்கள், முக்கோணம் எண்களின் இடமதிப்பு போன்ற சோதனைகளை செய்து காண்பித்தனர். முனிவாழை பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோனி மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியை ரேணுகா நன்றி கூறினார்.