திருக்கோவிலூர், ஜூலை 30: திருக்கோவிலூர் அருகே துரிஞ்சலாறு புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் எல்.வெங்கடேசன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார் (படம்).
மணம்பூண்டியையொட்டி துரிஞ்சலாறு செல்கிறது. இரும்பிலான பாலம் பழுதடைந்தது குறித்து தினமணி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 2008-09-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடியில் 66.04 மீட்டர் நீளம், 12.50 மீட்டர் அகலம் கொண்ட நான்கு நீர் வழிப்பாதை மற்றும் நடைபாதையுடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இப் பணி மீண்டும் டெண்டர் விடப்பட்டு கடந்த சனிக்கிழமை பணி தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர் எல்.வெங்கடேசன் பணியை தொடங்கி வைத்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் எஸ்.சிவக்குமார், சாலை ஆய்வாளர்கள் ஜி.பன்னீர்செல்வம், கே.குமரகுரு ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுக ஒன்றியச் செயலர் ஏ.வினாயகமூர்த்தி, தேமுதிக ஒன்றியச் செயலர்கள் முருகதாஸ், எடையூர் என்.பழனி, நகரச் செயலர்கள் ராயல் என்.பாலாஜி, மும்மூர்த்தி, மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் ஆதன்.ரவி, மாவட்ட மாணவரணிச் செயலர் உமாசங்கர், முன்னாள் தொகுதி பொருப்பாளர் ஏ.கிரிதரன், நகர துணைச் செயலர்கள் பரணிதரன், வீரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.