பொன்னேரி, பிப். 10: பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை, கழிப்பிட வசதி இல்லாதாதால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
÷பொன்னேரி பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடவசதி பற்றாக்குறை காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த பொன்னேரி பஸ் நிலையம் தேரடி சாலையில் உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
÷அது முதல் புதிய பஸ் நிலையத்தில் சிமெண்ட் சாலை, பயணிகள் தங்கும் அறை, பயணிகள் அமர்வதற்கு மேடை, கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முன் மாதிரி பஸ் நிலையமாக விளங்கி வருகிறது. ÷ஆனால் பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அமைந்துள்ளது. இதனால் பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, ஆரணி, கவரப்பேட்டை, கும்மிடிபூண்டி, பெரியபாளையம், காரனோடை, சோழவரம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
÷எனவே பொதுமக்கள் நலன் கருதி பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.