விழுப்புரம், பிப்.10: விழுப்புரம் மண்டல அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில் சென்னையில் 26-ம் தேதி நடைபெறவுள்ள அணு உலை எதிர்ப்பு மக்கள் திரள் மாநாட்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் விஸ்வகர்மா சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
மண்டல ஒருங்கிணைப்பாளர் கா. தமிழ்வேங்கை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சென்னையில் நடைபெறவுள்ள அணு உலைக்கு எதிரான மாநாட்டுக்கு மண்டல அளவில் விரிவான பரப்புரை செய்து மாநாட்டுக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை திரட்டித் தருவது.
நிபுணர் குழுவிடம் பேச்சு வார்த்தைக்குச் சென்ற அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்களான சுப. உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாகக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மதிமுக நகர செயலர் ம. சம்மந்தம், முன்னாள் நகர செயலர் ஜானகி ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கப்பூர் சித்தார்த்தன், கே. தமிழேந்தி, மு. முத்தமிழன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் அ. அகிலன், கோ. கணேசன், ஆனந்தபாபு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா. கல்விமணி, மு. நாகராசன், பி.வி. ரமேஷ், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு ஜோதி நரசிம்மன், கோ. பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜநாயகம் நன்றி கூறினார்.