திருவள்ளூர், பிப். 10: சென்னையில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்டதைக் கண்டித்து திருவள்ளூரில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
÷சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை மாணவனால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
÷இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு உரிய பணிப்பாதுகாப்பு தரவேண்டும். ஆசிரியர்களைத் தாக்குவோருக்கு கடும் தண்டனை தரும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூரில் நூற்றுக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
÷பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆர்.குப்புசாமி, நெடுஞ்செழியன், ஞானசேகரன், செல்வகுமாரி, செல்வணேகன், சம்பந்தன் உள்பட பலர் பேசினர்.
÷இதில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், உடற்கல்வி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.