சிதம்பரம், பிப். 10: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உரிய நிதி வழங்காததைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கடலூரில் வரும் 16-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் அவர் செய்தியாளர்களிடையே வியாழக்கிழமை தெரிவித்தது:
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துவிட்டு மெத்தனமாக உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1 லட்சம் செலவில் 1 லட்சம் வீடுகள் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. கடலூர் மாவட்டத்தில் கூரைகளே இல்லாத வகையில் கான்கிரீட் வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அதுபோன்று மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படால் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்.
சங்கரன்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் போட்டியிடுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை நிர்வாகக்குழு முடிவு செய்யும். மின்வெட்டு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் மாற்றி அமைக்கும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
÷பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் சு.திருமாறன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில இணைச் செயலாளர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் வ.க.செல்லப்பன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், நிர்வாகிகள் கோ.நீதிவளவன், பால.அறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, ரா.நெடுமாறன், ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.