பண்ருட்டி, பிப். 10: பண்ருட்டி ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயில் திருத்தேர் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடந்தது.
பண்ருட்டி காந்தி சாலையில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோயிலில் இருந்த திருத்தேர் முற்றிலும் சிதிலம் அடைந்து தேர் இருந்ததற்கான அடிச்சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது. இந்நிலையில் புதிய தேர் செய்வதற்காக இந்து அறநிலையத் துறை ரூ.7 லட்சம் ஒதுக்கியுள்ளது. மேலும் பொதுமக்கள் சார்பில் நிதி பெற்று ரூ.20 லட்சம் செலவில் புதிய தேர் செய்யும் பணிக்கு வித்திடப்பட்டது.
பண்ருட்டி நகர மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி திருத்தேர் திருப்பணியை தொடங்கி வைத்தார். கவுன்சிலர்கள் வி.ராஜதுரை, மோகன், அனைத்து வியாபாரிகள் சங்க பொது செயலர் கே.என்.சி.மோகனகிருஷ்ணன், தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் சி.ராஜேந்திரன், மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி சங்கத் தலைவர் எம்.மதன்சந்த், செயல் அலுவலர் நாகராஜ், எழுத்தர் ஏழுமலை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.