அட்டவீரட்டங்களில் சிறப்பு பெற்றது அதிகை வீரட்டானம்

 பண்ருட்டி, மே 30: சிவபெருமான் தமிழகத்தில் எட்டு இடங்களில் வீரத் திருவிளையாடல்களைப் புரிந்துள்ளார். இவையே அட்டவீரட்டானம் என அழைக்கப்படுகிறது. இதில் திருவதிகை வீரட்டானம் அதிகச் சிறப்பு பெற்றதாக விளங்கு

 பண்ருட்டி, மே 30: சிவபெருமான் தமிழகத்தில் எட்டு இடங்களில் வீரத் திருவிளையாடல்களைப் புரிந்துள்ளார். இவையே அட்டவீரட்டானம் என அழைக்கப்படுகிறது. இதில் திருவதிகை வீரட்டானம் அதிகச் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

 திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை, திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி ஆகியவையே அட்ட வீரட்டானங்கள் ஆகும்.

 திருக்கண்டியூர்: ஐந்து தலைகளைக் கொண்டிருந்த பிரம்மனின் செருக்கினை அடக்க, தன் சக்தியை வைரவராகத் தோற்றுவித்து, பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெடுத்து நான்முகனாக்கினார்.

 திருக்கடவூர்: தம்மைச் சரணடைந்த மார்கண்டேயருக்காக காலனை காலால் எட்டி உதைத்து என்றும் பதினாறாக வாழ அருள் புரிந்தார்.

 திருவதிகை: மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்து மறக்கருணையால் அவர்களை ஆட்கொண்டார்.

 திருவழுவூர்: தன்னை கொல்லை உருவாக்கப்பட்ட சக்திமிக்க யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு நடனமாடி ஆணவமலத்தை உணர்த்தியருளினார்.

 திருப்பறியலூர்: தக்கனின் யாகத்தையும் அவனது செருக்கையும் அழித்தருளினார்.

 திருக்கோவலூர்: அந்தகாசூரனின் அகந்தையை அழித்து, சிவஞானத்தை அளித்து சிவ கணங்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் பேற்றினைத் தந்தருளினார்.

 திருக்குறுக்கை: தன்மீது மலரம்புகளை எய்த மன்மதனை எரித்து. அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் அவளுக்கு மட்டும் உருவமாகவும், மற்றவர்களுக்கு அருவமாகவும் தோன்றும்படி அருள்புரிந்தார்.

 திருவிற்குடி: இறைவன் சக்தியை உணர்த்தப்பட்டும் அகந்தை கொண்ட சலந்தரன் உடலை இரண்டாகப்பிளந்தார் என ஒவ்வொரு வீரட்டானத்தின் பெருமைகளைக் கூறப்படுகிறது.

 ஆனால் அதிகைவீரட்டானம் திரிபுரம் எரித்த சிறப்புடன் மேலும் பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. அவைகள் புறசமய இருள்நீக்கி, சைவ மறுமலர்ச்சி பெறத் தொடங்கியது, திருநாவுக்கரசர் சூலை நோய் நீங்கப்பெற்றது, முதன்முதலில் தேவாரம் பாடியது, திலகவதியார் திருத்தொண்டுகள் புரிந்து சிவபெருமான் திருவடி நிழலை அடைந்தது, மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் களவாயில் இட்டுப் பொசுக்க முயன்றது உள்ளிட்ட சிறப்புகளை பெற்றது திருவதிகை வீரட்டானம்.

 மேலும் திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவதிகையில் வாழ்ந்தால் முக்தி, திருவண்ணாமலையில் இறந்தால் முக்தி எனும் பழம்பெருமைகளில், திருவதிகையில் வாழ்ந்தாலே முக்தி பெறலாம் என்கிற பெருமையைப் பெற்ற திருத்தலம் திருவதிகைதான்.

 பண்ருட்டி வட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

 திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பண்ருட்டி வட்டம் மற்றும் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு ஜூன் 1-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com