ஈதல் - இசைபட வாழ்தல் தமிழர் வாழ்வியல்: "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்
By DIN | Published On : 27th April 2019 09:25 AM | Last Updated : 27th April 2019 09:50 AM | அ+அ அ- |

ஈதல் - இசைபட வாழ்தல் என்பதுதான் தமிழர் வாழ்வியல் என "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
வடசென்னை நுண்கலை கல்விக்கழகம் சார்பில் "வட சென்னையில் இசை விழா' சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீசாயி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்து கொண்டு "இசையரசி டி.கே.பட்டம்மாள் விருதை' கர்நாடக இசைக்கலைஞர் ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலனுக்கு வழங்கினார்.
விழாவில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது: இசையுலகில் பல பாடகர்கள் வரலாம். ஆனால், இவை அனைத்துக்கும் பின்னணியாகவும், அனைத்து மகளிரும் மேடைகளில் பாடுவதற்கு முன்னோடியாகவும் இருந்த இசையரசி டி.கே.பட்டம்மாள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். மேடையில் அவர் பாடுவதற்கு பல எதிர்ப்புகள், தடைகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. டி.கே.பட்டம்மாள் எதிர்கொண்ட போராட்டங்களுக்கு நிகரான ஒரு போராட்டம் இல்லை என்றே கூற வேண்டும்.
மரபணுக்களில் கலந்த இசை: இசை என்பது சாதாரணமானது அல்ல. இந்தியச் சமுதாயம், குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்துக்கு இசை என்பது நம்முடன் இரண்டறக் கலந்த ஒன்று. "ஈதலும்- இசைபட வாழ்தலும்' என்பது தமிழரின் மரபணுக்களில் கலந்திருக்கிறது. பணம், பொருள் என செல்வச் செழிப்புடன் மட்டுமே வாழ்வதல்ல வாழ்க்கை. ரசனையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை. இசைதான் ரசனையின் உச்சகட்டம். மொழி, படிப்பறிவு என எதுவுமின்றி செவிகளால் கேட்கும்போதே மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு.
இசைந்து வாழ வேண்டும்: ஒரு மேடையில் வாயால் பாடுபவர், வயலின், தோல் வாத்தியம் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இசைந்திருக்கிறது. அதன் மூலம் மிகச் சிறந்த இசை உருவாகிறது. அதே போன்று வாழ்க்கையில் நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார் அனைவரோடும் இசைந்து வாழ்ந்தால் அந்த வாழ்வு இசையைப் போன்று இனிமையானதாக இருக்கும். எத்தகைய மன அழுத்தமாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு மனம் அமைதி பெற இசை அடிப்படையாக இருக்கிறது. இந்த அடிப்படை இலக்கணத்தை அடுத்த தலைமுறைக்கு அவசியம் கொண்டு செல்ல வேண்டும். நமது குழந்தைகளுக்கு இசை அறிவை கட்டாயமாகப் புகட்ட வேண்டும். தலைமுறைகள் பல கடந்தும் நமது இசை சிரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணம் நமது இசை இயற்கையோடு இயைந்தது. வானவில்லின் வண்ணங்களைப் போல, இயற்கையோடு இயைந்த ஏழு ஒலிகளைத் தரம் பிரித்து "சப்தஸ்வரமாக', அதாவது ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்களாக உருவாக்கி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். இது மிகப் பெரிய பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தை அடுத்த தலைமுறைக்குக் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வடசென்னையில் தொடர்ந்து இசை விழாவை நடத்தி இங்குள்ள மாணவர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் இசை ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார் டி.எஸ்.தியாகராஜன்.
இசை ஆர்வத்தை ஊக்குவிப்பதன் மூலம் இளையதலைமுறையினரிடம் அதிகரித்துவரும் மன அழுத்தத்தைப் போக்க அவர் எடுக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் எதிர்காலத்தில் சர்வதேச விருதுகளைப் பெறுவார். அதற்கு இந்த விருது அடித்தளமாக இருக்கும் என்றார்.
முன்னதாக ஸ்ரீசாயி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் டி.எஸ்.தியாகராஜன் வரவேற்றுப் பேசினார். இதில் பள்ளியின் முதல்வர் டி.எல்.சுந்தரதாஸ், வடசென்னை நுண்கலை கல்விக் கழகத்தின் தலைவர் கா.ச.கஜேந்திரன், செயலர் எஸ்.ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.