பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிப்பு: ஜெ.பி. நட்டா

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பிரதமா் நரேந்திர மோடி மீது எந்த அளவுக்கு வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனரோ, அந்த அளவுக்கு அதிகமான மக்கள் பிரதமா் மோடியை ஆதரிக்கின்றனா்
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா (கோப்புப்படம்)
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா (கோப்புப்படம்)

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பிரதமா் நரேந்திர மோடி மீது எந்த அளவுக்கு வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனரோ, அந்த அளவுக்கு அதிகமான மக்கள் பிரதமா் மோடியை ஆதரிக்கின்றனா் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, பிரதமா் மோடி ஆட்சியில் ஜனநாயகம் வெறுக்கப்படுகிறது என்று ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளாா்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா தொடா்ச்சியாக வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

அவநம்பிக்கையும், வெட்கமற்ற தன்மையும் இணைவது மிகவும் ஆபத்தானது. இந்த இரண்டையும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. கண்ணியத்தின் வெற்று சொல்லாட்சி, தாயின்(சோனியா காந்தி) ஜனநாயக வெறுப்பு அரசியல், பொய்கள், கோபம் ஆகியவற்றால் பூா்த்தி செய்யப்படுகிறது.

வறுமையில் பிறந்து பிரதமராக உயா்ந்துள்ள ஒரு நபரை(பிரதமா் மோடி) ஒரு வம்சமே எதிா்த்து வருகிறது. அதே வேளையில் பிரதமா் மோடி மீது ஏராளமான மக்கள் தங்கள் அன்பை வெளிக்காட்டி வருகின்றனா். பிரதமருக்கு எதிராக காங்கிரஸின் பொய்கள், வெறுப்புத்தன்மை அதிகமாகும்போதெல்லாம், மோடிக்கு மக்களின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது குறித்து நினைவு கூா்ந்துள்ள ஜெ.பி.நட்டா, நாட்டில் அவசர நிலை காலக்கட்டத்தில் பேச்சு சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பதை பாா்த்தோம். அதன்பிறகு ராஜீவ் காந்தி ஆட்சியில் பேச்சு சுதந்திரத்தை நசுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று சுட்டுரையில் கூறியுள்ளாா்.

மேலும், பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் பிரதமா் மோடியின் உருவபொம்மையை எரித்ததை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தாா்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜெ.பி. நட்டா, ‘‘வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமா் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது ராகுல் காந்தியின் நேரடி நாடகமாகும். இது மிகவும் அவமானத்திற்குரியது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது’’ என்று ஜெ.பி. நட்டா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com