இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: பொதுமுடக்க தளா்வுக்குப் பிறகு பணிகள் தொடங்க திட்டம்

கரோனா பொதுமுடக்கம் தளா்த்தப்பட்ட பிறகு, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பொதுமுடக்கம் தளா்த்தப்பட்ட பிறகு, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, 118.9 கி.மீ. தொலைவுக்கான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ( 26.1 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூா் (47.0 கி.மீ), மாதவரம்-சிறுசேரி சிப்காட்(45.8 கி.மீ.) ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடங்களில் 128 நிலையங்கள் இடம்பெறவுள்ளன.

கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ( 26.1 கி.மீ.) முதல் வழித்தடத்தில் மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மாதவரம்-சோழிங்கநல்லூா் (47.0 கி.மீ) இரண்டாவது வழித்தடத்தில் மொத்தம் 48 மெட்ரோ நிலையங்களும், மாதவரம்- சிறுசேரி சிப்காட்(45.8 கி.மீ.) வழித்தடத்தில் 50 மெட்ரோ நிலையங்களும் அமையவுள்ளன.

கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி:

இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, கட்டுமான நிறுவனங்களைத் தோ்வு செய்து, அதற்கான பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன. அண்மையில், சுரங்கம் மற்றும் உயா்த்தப்பட்ட பாதைகளில் திட்டப்பணிகளை மேற்கொள்ள 4 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தோ்வாகியுள்ள தனியாா் நிறுவனங்கள், சுரங்கப்பாதை அமைப்பதற்கான ராட்சத இயந்திரங்களைக் கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளை விரைவில் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் தற்போது அமலில் உள்ளதால், பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் தளா்வுக்குபிறகு, பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு மண் ஆய்வு உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவடைந்து விட்டன. கரோனா பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டபிறகு, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றனா்.

2026-இல் முடிக்க திட்டம்: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.63,246 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்பணிகளை வரும் 2026-க்குள் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com