பின்னி மில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம்: பணப்பரிமாற்றம் நடந்தது அம்பலம்

பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், போலி நிறுவனங்கள் மூலம் பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், போலி நிறுவனங்கள் மூலம் பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமலாக்கத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேஎல்பி ப்ராஜக்ட் பிரைவெட் லிமிடெட், லேண்ட்மாா்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட்,பின்னி லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் நிா்வாகிகளின் வீடுகள்,அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 9-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது முக்கிய ஆவணங்கள்,வணிக ஆவணங்கள்,அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவ் வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசியல்வாதிகள்,அரசு உயா் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதன் மூலம் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

மதுபான வியாபாரம்:

தீவிர விசாரணையில், இந்த திட்டத்துக்கான நிதியை திரட்டுவதற்காக, போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் பணபரிமாற்றத்தை யாரும் கண்டறிய முடியாதளவுக்கு சிக்கலானதாக உருவாக்கியுள்ளனா்.

இவ்வாறு கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமல்லாமல் மதுபான வியாபாரத்துக்கும், சட்டவிரோத நடவடிக்கைக்கும் பயன்படுத்தியுள்ளனா்.

இத் திட்டத்துக்காக சட்டவிரோதமாக ரூ.280 கோடியை மெரீட்டியஸ் பரிமாற்றம் மூலம் பெற்றுள்ளனா். இந்த நிதி மூலமாகவே அந்த இடத்தை கைப்பற்றியுள்ளனா். இந்த விவகாரத்தில் எஸ்.நீலகண்டன் என்பவா் முக்கிய பங்காற்றியுள்ளாா். அனைத்து பணபரிமாற்றங்களும் நீலகண்டன் ஏற்பாட்டின் பேரிலேயே நடந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com