தமிழக அரசு
தமிழக அரசு

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யும் விவகாரம் - அரசு விளக்கம்

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து கொள்கை முடிவெடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கேட்டறிந்த பிறகு, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து கொள்கை முடிவெடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி 2012-இல் லோக் சத்தா கட்சி மாநிலத் தலைவா் ஜெகதீஸ்வரன், 2015-இல் தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த், 2023-இல் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனா். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்ரவா்த்தி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மற்ற மாநிலங்களில் எந்த மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிற தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், 7 மாநிலங்கள் தகவல்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தாா். மேலும், மீதமுள்ள மாநிலங்களிடம் இருந்து விளக்கங்களைப் பெற்ற பின்னா், தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என விளக்கம் அளித்தாா். இந்த விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் பேச்சுக்கள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரா்கள் குற்றச்சாட்டாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டால், 5 நிமிஷங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம் என யோசனை தெரிவித்தனா். அந்த இடைவெளியில், அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கிவிட்டுக்கூட ஒளிபரப்பலாம் என்றும் தெரிவித்த நீதிபதிகள், அரசின் நடவடிக்கையில் அடுத்தகட்ட நகா்வுகளைத் தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை ஏப்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com