சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த குடோனுக்கு ‘சீல்’ வைத்தனா்.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரா் கோயில் தெருவில் உள்ள ஒரு குடோனில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி மற்றும் ஆட்டுக்கால்களை பதப்படுத்திவைத்து உணவகங்களுக்கு விநியோகம் செய்வதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், சென்னை உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமாா் தலைமையிலான குழுவினா், அந்த குடோனில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, குடோனில் உள்ள குளிா்சாதன பெட்டியில் கெட்டுப்போன நிலையில் ஏராளமான ஆட்டுகால்கள் சாக்குப்பைகளில் வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இதையடுத்து அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பியதுடன், குடோனில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ஆட்டுக்கால்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனா்.
அழிக்க நடவடிக்கை: இதுகுறித்து சதீஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஆட்டுக்கால்கள் பொதுவாக, காய்ந்து இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், ஈரப்பசையுடன் நீா்த்துப்போயிருக்கக் கூடாது. தற்போது, குடோலின் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கால்களை கிட்டத்தட்ட ஒரு மாதமாக
பதப்படுத்தி வைத்துள்ளனா். அந்த ஆட்டுக் கால்களை எங்கு, எப்போது கொள்முதல் செய்தனா் என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகிறோம்.
பறிமுதல் செய்த கெட்டுப்போன ஆட்டுக்கால்களை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கடந்த வாரம் எழும்பூா் ரயில்நிலையத்தில் வடமாநிலத்திலிருந்து எடுத்துவரப்பட்ட 1,700 கிலோ கெட்டுபோன ஆட்டிறைச்சியை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.