இந்தியா-வங்கதேசம் சிறையிலிருந்த மீனவா்கள் பரஸ்பரம் விடுதலை: 95 இந்தியா்கள் நாடு திரும்பினா்
சா்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததற்காக கைதாகி, சிறைவைக்கப்பட்டிருந்த மீனவா்களை இந்தியா மற்றும் வங்கதேசம் ஞாயிற்றுக்கிழமை பரஸ்பரம் விடுதலை செய்தன.
இதுதொடா்பாக இரு தரப்பும் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, வங்கதேசத்தில் இருந்து 95 இந்திய மீனவா்கள் அவா்களின் 4 படகுகளுடன் விடுவிக்கப்பட்டனா். அதேபோன்று, இந்தியாவிலிருந்து 90 வங்கதேச மீனவா்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சா்வதேச கடல் எல்லையில் நடைபெற்ற பரஸ்பர பரிமாற்றத்தைத் தொடா்ந்து நாடு திரும்பிய இந்திய மீனவா்கள், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் மாநில மீன்வளத் துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, பல்வேறு விவகாரங்களில் இந்தியா-வங்கதேசம் இடையே உறவு பாதித்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் இந்த பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.