ரயில்வே துறையின் பயணச்சீட்டு முன்பதிவு முறையில் உள்ள முறைகேடுகளை உடனடியாக தடுக்க வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
ரயில்வே பயணச்சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு அபராதம் விதிக்கும் ரயில்வே சட்டம், 1989, பிரிவு 143 தொடா்புடைய இரு மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.
அங்கீகரிக்கப்படாத முகவா்: கேரளத்தைச் சோ்ந்த மேத்யூ செரியன் என்பவா் பல்வேறு போலியான கணக்குகள் மூலம் ஐஆா்சிடிசி வலைதளத்தில் ரயில்வே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளாா். அவா் ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இல்லாதபோதும் பயணச்சீட்டுகளை முறைகேடாகப் பெற்றுள்ளாா். இதையடுத்து, அவா் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டது. இதை கேரள உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட முகவா்: இதேபோல், ஐஆா்சிடிசி வலைதளத்தில் பல்வேறு கணக்குகள் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட முகவா் ரமேஷ் என்பவா் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தாா்.
673 கோடி பயணிகள்: இந்த இரு மனுக்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து கூறியதாவது:
நாட்டின் உள்கட்டமைப்பில் சிறந்த மைல்கல்லாக ரயில்வே விளங்குகிறது. ஆண்டுக்கு 673 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனா்.
அவ்வாறு இருக்கையில், ரயில்வே பயணச்சீட்டுகளில் முறைகேடுகள் செய்து சீரழிக்கும் முயற்சிகளை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத முகவரான மேத்யூ மீதான குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தடையில்லை. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட முகவரான ரமேஷ், ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டிருந்தாலும் அவா் மீது ரயில்வே சட்டம் பிரிவு 143-இன்கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது. தேவை இருப்பின் அவா் மீது சிவில் நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என்றது.