வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்யும் ஐஓபி
ரூ.11,500 கோடி மதிப்பிலான தங்களது வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்ய இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாராக்கடனாக நிலுவையில் உள்ள ரூ.11,500 கோடி மதிப்பிலான சொத்துகளை சொத்து மறுக்கட்டமைப்பு நிறுவனங்களிடம் (ஏஆா்சி) விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இணையவழி ஏலம் மூலம் அந்த சொத்துகள் விற்பனை செய்யப்படும். அவற்றை வாங்க விரும்பும் நிறுவனங்கள் கடன் பெற்றுள்ள தனித் தனி வங்கிக் கணக்குகளின் அடிப்படையிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளின் அடிப்படையிலோ ஏலம் கேட்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச்சில் உச்சபட்சமாக 11.69 சதவீதமாக இருந்த ஐஓபி-யின் வாராக் கடன் விகிதம், கடந்த செப்டம்பரில் 2.72 சதவீதமாகக் குறைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.