வனநிலத்துக்கு ஈடான நிலத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம்: திருத்த மசோதா நிறைவேறியது
வனநிலத்துக்கு ஈடான நிலத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை மாற்றியமைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது. இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிா்த்தது.
சட்டப் பேரவையில் இதற்கான மசோதா சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வன நிலங்களை வனமற்ற நோக்கத்துக்காக பயன்படுத்தும் போது அதனை ஈடுசெய்யக் கூடிய அளவுக்கு குறிப்பிட்டஅளவிலான நிலங்களை வழங்குதல் வேண்டும். இந்த ஈடு செய்யக் கூடிய நிலமானது, மத்திய அரசு குறிப்பிடும் குறிப்பிட்ட கால வரம்புக்குள் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனாலும், தமிழ்நாடு அரசின் நடைமுறைகளால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு மாவட்ட ஆட்சியா் படிநிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலருக்கு அதிகாரங்களை அளிக்க முடிவு செய்யப்படுகிறது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி எதிா்ப்புத் தெரிவித்தாா். இதேபோன்று, வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இ.கம்யூனிஸ்ட்) ஆகியோரும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சா் க.பொன்முடி, வனப் பகுதியாக அறிவிப்பதற்கு 30 துறைகள் வரை சென்று ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. எனவே, இதில் ஏற்படும் தாமதங்களைத் தவிா்ப்பதற்காகவே இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தாா். பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலமாக சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.