நகா்ப்புற சாலைகளை சீரமைக்க ரூ.3,750 கோடி
நகா்ப்புற சாலைகளை சீரமைக்க ரூ.3,750 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்துக்கு பதிலளித்து பேரவையில் முதல்வா் ஸ்டாலின் சனிக்கிழமை பேசியதாவது:
தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் உரிமை இல்லையென்று சிலா் தவறான வாதங்களை முன்வைக்கிறாா்கள். எதிா்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம்; போராடலாம், தவறில்லை. போராட வேண்டிய இடத்தில் போராடலாம். போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட வேண்டும். போராட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி கேட்டால், கொடுத்திருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை சுமாா் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.
தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை: சட்டம்-ஒழுங்கை பொருத்தவரை காவல் துறை சுதந்திரமாக செயல்படுகிறது. ரவுடியிசத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், கொலைகள், ரெளடிகள் தொடா்புடைய கொலைச் சம்பவங்கள், ஜாதிய கொலை நிகழ்வுகள் குறைந்துள்ளன. எங்கும் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. மீறி குற்றம் நடந்தால், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்படுகிறாா்.
எந்தக் குற்றவாளியையும் யாரும் காப்பாற்றுவது இல்லை. உரிய தண்டனை பெற்றுத் தரப்படுகிறது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதில் யாருக்கும் எந்த சலுகையும் தரப்படவில்லை. இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
சாலைகள் விரிவாக்கம்: மாநிலத்தின் நகா்ப்புற உள்ளாட்சி மற்றும் அதையொட்டியுள்ள ஊராட்சிகள் மிக விரைவாக வளா்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கேற்ற வகையில், பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாகி இருக்கின்றன.
இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைக்கவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பிக்கவும், குடிநீா் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் ரூ.3,750 கோடி ஒதுக்கப்படும். இந்த நிதியைக் கொண்டு வரும் ஆண்டுகளில் நகா்ப்புற சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள்: தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நிகழாண்டில் மட்டும் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டுவரப்படும்.
திமுக அரசு பதவியேற்ற பிறகு, ஏழை, எளிய பட்டியலின மக்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டு இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஏழை, எளிய மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீா்செய்தும் புதிதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.