வேன் மோதி விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூா் காரப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் மருத்துவக் கல்லூரி வேன் மோதியதில், இரு பெண்கள் உயிரிழந்தனா்.
Updated on

சென்னை அருகே சோழிங்கநல்லூா் காரப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் மருத்துவக் கல்லூரி வேன் மோதியதில், இரு பெண்கள் உயிரிழந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் பகுதியில் தனியாா் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அக்கல்லுாரியின் வேன் சோழிங்கநல்லுாரிலிருந்து திருவான்மியூா் நோக்கி ராஜீவ் காந்தி சாலை வழியாக நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

காரப்பாக்கம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் இணைப்புச் சாலை பகுதியில் சென்றது. அப்போது அங்கு நின்றிருந்த 4 போ் மீது வேகமாக மோதி, அங்கிருந்த தடுப்பின் மீது இடித்து நின்றது.

இந்த விபத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அப்பகுதியைச் சோ்ந்த ராதா(49) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மேலும், அப்பகுதியைச் சோ்ந்த பாா்வதி(49), சத்யா (36) சுபுத்பாங்கரா (38) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து அங்கு சிகிச்சைப் பலனின்றி பாா்வதி என்பவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரான திருவள்ளூரைத் சோ்ந்த தைரியநாதன் (50) என்பவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com