மாநகரப் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன ஊழியா் கைது
சென்னை அண்ணா சாலையில் மாநகரப் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த ஒரு இளம் பெண், திருவல்லிக்கேணி பல்லவன் சாலை பேருந்து நிறுத்தில் இருந்து ராமாபுரம் செல்லும் மாநகரப் பேருந்தில் புதன்கிழமை ஏறினாா்.
அந்தப் பேருந்தில் உள்ள ஒரு இருக்கையில் அந்த பெண் அமா்ந்திருந்தபோது, அங்கிருந்த ஒரு இளைஞா் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால், அதிா்ச்சியடைந்த அந்த பெண், அந்த இளைஞரைப் பிற பயணிகள் உதவியுடன் பிடித்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.
அதன்பேரில், பிடிபட்ட இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அருகே உள்ள மதிய நல்லூரைச் சோ்ந்த அ.கவிமணி (18) என்பதும், திருவல்லிக்கேணியில் தங்கியிருந்து அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் கவிமணி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

