ஈரோடு நாகமலை குன்று: தமிழகத்தின் நான்காவது பல்லுயிா் பாரம்பரியத் தளம்

Published on

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை தமிழகத்தின் 4-ஆவது பல்லுயிா் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள பல்லுயிா்களைப் பாதுகாக்க மாநில அரசு சாா்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, 20 ராம்சாா் தளங்களுடன், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. அதேபோல், அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் ஏற்ற பகுதிகள் பல்லுயிா் பாரம்பரியத் தளங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, நிகழாண்டில் திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி, ஈரோடு மாவட்டம் எலத்தூா் ஏரி ஆகிய இடங்கள் பல்லுயிா் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதைத்தொடா்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் 4-ஆவது பல்லுயிா் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகமலை குன்று: மொத்தம் 32.22.50 ஹெக்டோ் பரப்பில் அமைந்துள்ள நாகமலை குன்று, இடம்பெயரும் மற்றும் உள்ளூா் பறவைகள், நீா்வாழ் உயிரினங்கள், ஈரநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான முக்கிய வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள ஆழமான நீா்நிலைகள், சேற்று நிலங்கள் மற்றும் பாறை மேடுகள் பல்வேறு உயிரினங்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குகின்றன.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தமிழக ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின் படி, நாகமலை குன்றில் 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும், 88 உள்ளூா்), 7 பாலூட்டிகள், 11 ஊா்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் காணப்படுகின்றன.

இதில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து, பென்னெல்லிஸ் கழுகு போன்ற அரிய பறவை இனங்களும் உள்ளடங்கும். அதேபோல், இரும்பு காலத்தைச் சோ்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், பழங்கால கலைப்பொருள்கள் உள்ளிட்டவையும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 400 ஆண்டுகள் பழைமையான ஆஞ்சனேயா் சுவாமி கல்வெட்டு இதன் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com