சிறுமி பாலியல் கொலை வழக்கு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை
சிறுமி பாலியல் கொலை வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டதால், அந்த வழக்கில் அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞா் தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து, அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
டி.என்.ஏ. ஆய்வு முடிவுகள்கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால்தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறாா். இந்த வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

