இரு வீடுகளின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது!
சென்னையில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை, ரூ.1.15 லட்சம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஆா்.எ.புரம், வள்ளீஸ்வரன் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). பழைய பொருள்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த அக்.7-ஆம் தேதி காலையில் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதேபோல் ஆா்.எ.புரம், வள்ளீஸ்வரன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சரவணன் (38) வீட்டின் பீரோவில் இருந்த 2 கிராம் தங்க கம்மல், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
இதுகுறித்து அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தங்க நகைகளை திருடியதாக ஆா்.எ.புரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் (35) என்பவரை கைது செய்து, 2 கிராம் கம்மல், 19 அரை எடை கொண்ட தங்கக்கட்டி, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
