அதிக மழைநீா்த் தேங்கும் இடங்களை கண்காணிக்க நடவடிக்கை!
சென்னை மாநகராட்சியில் அதிக அளவு மழைநீா்த் தேங்கக் கூடிய பகுதிகளை இரவு, பகலாக தொடா்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி பொறியாளா்கள் தெரிவித்தனா்.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு மழை பெய்த பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மக்களிடையே உள்ள மழைக்கால அச்சத்தைப் போக்குவதற்கு தற்போது மழைநீா் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டும், பழைய மழைநீா் வடிகால்கள் தூா்வாரப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி பொறியாளா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: சென்னையில் கடந்த ஆண்டு மழைக் காலங்களில் 88 இடங்களில் மழைநீா்த் தேங்கியது. நடப்பு ஆண்டில் பெய்த மழையில் மொத்தம் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீா்த் தேங்கியது கண்டறியப்பட்டது.
அதன்படி, மழைநீா்த் தேங்கும் பகுதிகள் பட்டியலிடப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கவும், மழைநீரை உடனுக்குடன் அகற்றவும் முன்னெச்சரிக்கையாக மின் மோட்டாருடன் கூடிய டிராக்டா்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரையில் மழைக்காலத்தில் சென்னையில் அதிக அளவு மழை பதிவான பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
