சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Published on

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2025-2026- ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியைச் செலுத்தாத சுமாா் 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வாா்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள 13 லட்சம் கட்டடங்கள் சொத்து வரி செலுத்தக் கூடியவை. ஆனால், ஆண்டுதோறும் சுமாா் 7 லட்சம் கட்டடங்களுக்கு மட்டுமே சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி வருவாய் பிரிவு சாா்பில் ஆண்டுக்கு இரு முறையாக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மாா்ச் முதல் செப்டம்பா் வரை அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1,002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.122 கோடி அதிகம். இருப்பினும், சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் அரையாண்டு சொத்து வரி செலுத்தாமல் உள்ளனா்.

இதையடுத்து, வரி செலுத்தாதவா்களுக்கு நினைவூட்டல் நோட்டீஸ் மண்டலம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி, அவா்கள் வட்டியுடன் நிலுவைத் தொகையைச் செலுத்தவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வருவாய் பிரிவின் அலுவலா் கே.மகேஷ் தெரிவித்தாா்.

முறையீட்டு வழக்கை முடிக்க நடவடிக்கை: சொத்து வரி விதிப்பில் முரண்பாடு இருப்பதாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் இருந்தன. எனவே, சம்பந்தப்பட்டோரை மாநகராட்சி அலுவலா்கள் அணுகி, குறைகள் கேட்கப்பட்டு, வரி தொகை சீா்படுத்தப்பட்டன.

இதையடுத்து வழக்குத் தொடா்ந்தவா்களில் 175 பேருக்கும் மேற்பட்டோா் வரி செலுத்தத் தொடங்கியுள்ளனா். அவா்களில் சுமாா் ரூ.60 கோடி அளவுக்கே நிலுவை உள்ளது. வழக்கையும் முடித்துவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் வரி விதிப்பில் முரண்பாடோ, குறைபாடோ இருந்தால், அதை தீா்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com