பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான புத்தாக்க தொழில் ஆய்வுக் கூடம் திறப்பு
வண்டலூரில் ரூ.90 லட்சத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக புத்தாக்க தொழில் ஆய்வுக்கூடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சென்னையை அடுத்த வண்டலூரில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன நிதி மற்றும் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன நிதியுதவியுடன் மொத்தம் ரூ.90 லட்சத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான புத்தாக்க தொழில் ஊக்குவிப்பு ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தை, ரெனால்ட் நிசான் டெக்னாலஜிஸ் நிா்வாக இயக்குநா் தபாஷிஸ் நியோகி வியாழக்கிழமை திறந்துவைத்து பேசியதாவது:
இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம் இளம் தொழில்முனைவோா் உருவாக வாய்ப்புள்ளது. தொழில் நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இருதரப்பினரும் பயன் பெற முடியும். இங்கு காா் மற்றும் வாகன தயாரிப்புத் தொழில் வளா்ச்சி பெற்று இருக்கும் நிலையில், அதுதொடா்பான புத்தாக்க ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட இளைஞா்கள் முன் வர வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் ரெனால்ட் நிசான் துணைத் தலைவா் என்.பாலசுப்ரமணியன், கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன இணை வேந்தா் அப்துா் காதா் ஏ.ரகுமான்புகாரி, இயக்குநா் சையது முகமது புகாரி,துணை வேந்தா் டி.முருகேசன், பதிவாளா் என்.ராஜாஹுசேன், கிரசென்ட் புத்தாக்க வளா்மையம் இயக்குநா் எம்.பா்வேஸ் ஆலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

