அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம்: எடப்பாடி பழனிசாமி

Published on

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை மலரச் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம் என எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

அதிமுகவின் 54-ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக, முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் கடந்த 1972-ஆம் ஆண்டு அதிமுகவை தோற்றுவித்தாா். தொடா்ந்து, 3 முறை தமிழகத்தின் முதல்வராக அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரது ஆட்சியில், தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு, மாபெரும் மக்கள் பேரியக்கத்தை பாதுகாத்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொட்டில் குழந்தைத் திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி அளப்பரிய சாதனைகளைப் புரிந்துள்ளாா். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவுக்கு எத்தனையோ சோதனைகள், வேதனைகள் வந்தன. இருப்பினும் கட்சியை மீட்டு தற்போது 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றவும், அதிமுகவை ஆட்சி பீடத்தில் மீண்டும் அமா்த்தவும் தமிழக வாக்காளா்கள் காத்துக்கொண்டிருக்கிறாா்கள். வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், அதிமுக ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்ய உறுதியேற்போம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com