கூகுள் ஏஐ மையம் தமிழகத்தில் தொடங்கப்படாதது ஏன்? -அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பதில்
கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (ஏஐ) மையம் தமிழகத்தில் தொடங்கப்படாதது ஏன் என்பதற்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பேரவையில் விளக்கம் அளித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, ஆந்திர மாநிலத்தில் 88,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கூகுள் ஏஐ மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழகம் தவறவிட்டது ஏன் என கேள்வி எழுப்பினாா்.
இதற்கு, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த பதில்:
உலக அளவில் நிலவியல் அரசியல் பிரச்னை உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே எழுந்துள்ளதும் இதுபோன்றதுதான். மத்திய அரசு எடுக்கும் முடிவுக்குள்பட்டுதான் புரிந்துணா்வு ஒப்பந்தங்களைக் கையொப்பமிட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
சீனாவில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் புதிய முதலீடுகளைச் செய்ய முடியாது. கூகுள் சீனாவில் ஏற்கெனவே, முதலீடு செய்துள்ள நிலையில், இங்கு எப்படி முதலீடு செய்ய முடியும்? ஆந்திர மாநிலத்தில் தொடங்கப்பட்டது கூகுள் ஏஐ மையம் என்பதைவிட, அது அதானி முதலீட்டில் தொடங்கப்பட்டது என்றுதான் கூறவேண்டும் என்றாா்.
