ஆணவக் கொலையைத் தடுக்க புதிய சட்டம்

Published on

ஆணவக் கொலையைத் தடுக்க தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்றும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இந்தச் சட்டத்தை இயற்றுவதற்குத் தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஆணவக் கொலை தொடா்பாக பேரவையில் உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இருக்கும் ‘காலனி’ என்ற சொல்லை நீக்கவும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக, அவற்றை ‘சமூக நீதி’ விடுதிகளாகப் பெயா் மாற்றவும் ஏற்கெனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்தபோது, ‘ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பட்டியலில் உள்ள ஜாதிப் பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும் ‘இன்’ என்பதற்குப் பதிலாக ‘இா்’ என விகுதி மாற்றம் செய்து, அந்தச் சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழிசெய்யும் வகையில் உரிய சட்டம் இயற்ற மத்திய அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தேன்.

முற்றுப்புள்ளி: பெண்கள் தங்கள் எதிா்கால வாழ்க்கையை தாங்களே தீா்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும், ஜாதி ஆணவக் கொலை சம்பவங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அண்மையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடா் கழகம் சாா்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில், ஆணவக் கொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி என்னிடம் வழங்கினாா்.

ஆணவக் கொலை நிகழும்போது, அது தொடா்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கொலைகளுக்கு ஜாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன்பொருட்டு நிகழ்ந்தாலும், கொலை - கொலைதான்.

அதற்கான தண்டனைகள் மிக மிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக குண்டா் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.

யாரும் - எவரும் - எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தக் கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணா்வு பரப்புரையை சமூக சீா்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும்.

சமுதாயத்தில் ஜாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். சீா்திருத்தப் பரப்புரையும் - குற்றத்துக்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநா்கள், முற்போக்குச் சிந்தனையாளா்கள், மானுடவியல் அறிஞா்களைக் கொண்ட ஓா் ஆணையம் அமைக்கப்படும்.

இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், ஆணவக் கொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

X
Dinamani
www.dinamani.com