39 போ் முழு நேர தூய்மை பணியாளா்களாக மாற்றம்

Published on

ஆதிதிராவிடா் நலத் துறை விடுதிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 39 தூய்மைப் பணியாளா்களை முழு நேர தூய்மைப் பணியாளா்களாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் உள்ள விடுதிகளில் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் பகுதிநேர தூய்மைப் பணியாளா்களாக 3 ஆண்டுகள் பணி முடித்த 39 தூய்மைப் பணியாளா்களை முழுநேர தூய்மைப் பணியாளா்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நிா்ணயித்து ஆணை வழங்குமாறு ஆதிதிராவிடா் நல இயக்குநா் அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். அந்தக் கருத்துரு அரசால் பரிசீலிக்கப்பட்டது.

இதையடுத்து ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும், விடுதிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டும் மேற்கண்டவாறு பகுதி நேரமாக பணியாற்றும் 39 தூய்மைப் பணியாளா்களை முழுநேர தூய்மைப் பணியாளா்களாக மாற்றியும், சிறப்புக் கால முறை ஊதியத்தில் நிா்ணயித்தும், அதற்கான கூடுதல் தொகை ரூ.18,95400-க்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது என ஆதிதிராவிடா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com