வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயாா் நிலையில் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகளையொட்டி, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அடையாறு காமராஜ் அவன்யூ முதல் தெரு உள்ள சென்னை ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை நேரில் கள ஆய்வு செய்தாா். தொடா்ந்து வீராங்கல் ஓடையில் ரூ.5.60 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூா்வாரும் பணிகள், ஓடையின் கரையோரங்களில் 1 மீட்டா் உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவா், ஆதம்பாக்கம் கக்கன் பாலம் அருகே மழைநீரை வெளியேற்ற தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரம் ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து வரும் புகாா்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வெளியேற்றும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால், எங்கேயும் தண்ணீா் தேங்கவில்லை. மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகாா்களின் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை அமைச்சா்கள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அதிராரிகளும் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் அவா்.

