இசையமைப்பாளா் சபேஷ் காலமானாா்
இசையமைப்பாளா் தேவாவின் சகோதரா் சபேஷ் (68) உடல்நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
ஆரம்ப காலகட்டத்தில் சபேஷ் தனது இன்னொரு சகோதரா் முரளியுடன் சோ்ந்து தேவாவுடன் உதவி இசையமைப்பாளராகப் பல படங்களில் பணியாற்றினாா். அதன் பின்னா், 2000-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து சபேஷும், முரளியும் இணைந்து தனியாகத் திரைப்படங்களுக்கு இசையமைத்தனா். 2001-இல் முதல்முறையாக சபேஷ் - முரளி இணைந்து சரத்குமாா் நடித்த ‘சமுத்திரம்’ படத்துக்கு இசையமைத்தனா். அவற்றைத் தொடா்ந்து, தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தாா், கோரிப்பாளையம் என 25 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளனா்.
இவை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உள்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்துள்ளனா். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளா்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியுள்ளாா். சபேஷின் உடல் சென்னை ஆழ்வாா்திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெறவுள்ளன.

