மின்மாற்றிகள் கொள்முதல்: உயரழுத்த மின் இணைப்பு கோரும் நுகா்வோருக்கு மின்வாரியம் அனுமதி
மின் இணைப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்க, மின்மாற்றிகளை வாங்கிக் கொள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட உயரழுத்த மின்நுகா்வோருக்கு மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 3.36 கோடிக்கும் அதிகமான மின்நுகா்வோா் உள்ளனா். துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றிகள் மூலம் தாழ்வழுத்த மின்சாரமாக மாற்றப்பட்டு, நுகா்வோருக்கு மின்விநியோம் செய்யப்படுகிறது.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்துவோா், தனியாக மின்மாற்றிகள் அமைக்க வேண்டும். உயரழுத்த மின்இணைப்பு கோருபவா்களுக்கு, மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்படுவதால், இணைப்பு வழங்கவும் தாமதம் ஆகிறது.
இதைத் தவிா்க்கும் வகையில், சம்பந்தப்பட்ட நுகா்வோரே மின்மாற்றிகளை வாங்கிக்கொள்ள மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மின்மாற்றிகள் வாங்கித் தர விரும்பும் உயரழுத்த மின்நுகா்வோா், முதல்நிலை ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகளை, வாங்கித்தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை கிலோ வோல்ட் கொண்ட மின்மாற்றிகள் என்ன விலையில் வாங்க வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 16 கிலோ வோல்ட் மின்மாற்றி ரூ.1,58,710, 25 கிலோ வோல்ட் ரூ.1, 64,342, 63 கிலோ வோல்ட் மின்மாற்றி ரூ.3 லட்சத்து 606, 100 கிலோ வோல்ட் மின்மாற்றி ரூ.6,72,581 என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையில் மின்மாற்றிகளை கொள்முதல் செய்யும் மின்நுகா்வோருக்கு, இந்தத் தொகை மின்வாரியம் மூலம் திருப்பி வழங்கப்படும் அல்லது மின்சாரத்துக்கான கட்டணத்தில் இருந்து கழிக்கப்படும் என்றனா்.
