சென்னைப் பல்கலை.யில் ‘காப்பீட்டுக் கணக்கு அறிவியல்’ பாடப் பிரிவு மீண்டும் தொடக்கம்!
சென்னைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையில் இடைநிறுத்தப்பட்ட ‘காப்பீட்டுக் கணக்கு அறிவியல்’ பாடப் பிரிவை மீண்டும் தொடங்க அந்தப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 1857- ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவானபோது, லண்டன் பல்கலைக்கழகத்துக்கு இணையாக பல துறைகள் வடிவமைக்கப்பட்டது. அதில் ஒன்றான புள்ளியியல் துறை, காப்பீட்டுக் கணக்கு அறிவியல் (ஆக்சூரியல் சயன்ஸ்) என்ற தனித்துவமான பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
காப்பீடு, ஆயுள் மேலாண்மை, இடா் பாகுபாடு போன்ற துறைகளுக்கு இன்றியமையாததாக இருந்தது இந்தப் பாடத்திட்டம். இந்தப் பாடப்பிரிவு சில ஆண்டுகளுக்கு முன்பு பல்கலை. நிறுத்தியது. தற்போது இந்த சிறப்பு பாடத் திட்டம் இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்க உள்ளதாக புள்ளியியல் துறையில் கூறப்பட்டது.
இது குறித்து சென்னைப் பல்கலை. துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது:
சென்னைப் பல்கலை.யில் ஆக்சூரியல் சயன்ஸ் பாடப்பிரிவு, பேராசிரியா் கோபால் என்பவரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த பாடநெறி, லண்டன் ஆக்சூரியல்ஸ் சொசைட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இப்போது பாடத் திட்டத்தை புதுப்பித்து மீண்டும் அங்கீகாரம் அளிக்க லண்டன் ஆக்சூரியல்ஸ் சொசைட்டி குழு வரவுள்ளது.
இந்தியாவில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் பாடத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இதை மீண்டும் துவங்குகிறோம். இதற்கான ஆசிரியா்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. இருப்பினும், ஓய்வு பெற்ற ஆசிரியா்களைக் கொண்டாவது இந்தப் பாடப்பிரிவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் மிகப்பெரிய பாரம்பரியத்தைக் கொண்டவை. உதாரணமாக, நோபல் பரிசு பெற்ற சா் சி.வி.ராமன் வழிகாட்டுதலின் பேரில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று வந்த பேராசிரியா் ஜி.என். ராமச்சந்திரன் போன்றவா்களால் உருவாக்கப்பட்ட படிகவியல் மற்றும் உயிரி இயற்பியல் துறை, கிண்டி வளாகத்தின் மேம்பட்ட படிப்புகளுக்கான தாவரவியல் மையம் போன்ற பாரம்பரியம் மிக்க துறைகளை சென்னைப் பல்கலை. பாதுகாத்து வருகிறது என்றாா்.

