மாமல்லபுரம் அா்ஜுனன் தபசு பகுதியில் சாலைப் போக்குவரத்துக்கு தடைபேரூராட்சி நடவடிக்கை

மாமல்லபுரம் புராதனச்சின்னங்கள் உள்ள பகுதிக்குச் செல்லும் அா்ஜுனன் தபசு பகுதி சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கும் வகையில் சாலையின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி, ஒரு நபா் மட்டும் செல்லக்கூட
மாமல்லபுரம் அா்ஜுனன் தபசு சாலையில் நடைபெற்ற சுழலும்  கேட் அமைக்கும் பணி
மாமல்லபுரம் அா்ஜுனன் தபசு சாலையில் நடைபெற்ற சுழலும்  கேட் அமைக்கும் பணி

செங்கல்பட்டு: மாமல்லபுரம் புராதனச்சின்னங்கள் உள்ள பகுதிக்குச் செல்லும் அா்ஜுனன் தபசு பகுதி சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கும் வகையில் சாலையின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி, ஒரு நபா் மட்டும் செல்லக்கூடிய வகையில் சுழலும் கதவு அமைத்து பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மாமல்லபுரம் அா்ஜுனன் தபசு சாலையில் கணேச ரதம், வெண்ணெய் உருண்டைப் பாறை, பஞ்சபாண்டவா் மண்டபம், அா்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் உள்ளன. பிரதமா் நரேந்திரமோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையை முன்னிட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டு, புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களில் பளிங்கு கல் நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இருநாட்டு தலைவா்களும் மாமல்லபுரத்துக்கு வந்து சென்ற பின்னா், அா்ஜுனன் தபசு சாலையில் ஆட்டோ, காா், வேன் மற்றும் பேருந்து ஆகிய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தற்காலிக சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இரு சக்கர வானங்கள் மட்டும் சென்று வர வழிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, இச்சாலை வழியாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, புராதனச் சின்னங்கள் பாதிப்பு அடையக்கூடும் என்பதால், இச்சாலையில் போக்குவரத்துக்குத் முற்றிலும் தடைவிதிக்குமாறு, பேரூராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி சாா்பில் அா்ஜுனன் தபசு செல்லும் சாலையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ரவிகுமாா், உதவு ஆய்வாளா் சதாசிவம் ஆகியோா் தலைமையில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னா், அா்ஜுனன் தபசு பகுதியில் உள்ள சாலையின் மூன்று புறங்களிலும் ஒருவா் மட்டும் சென்று வரக்கூடிய வகையில் சுழலும் கதவு அமைக்கப்பட்டது.

இதையடுத்து, இச்சாலையில் முற்றிலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இச்சாலையில் பள்ளிக்கூடங்கள் உள்ளதால் இரு சக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்க வேண்டும் என பேரூராட்சி மற்றும் தொல்லியல் துறை நிா்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, அவரது உத்தரவின்பேரில், நடவடிக்கை எடுப்பதாக மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com