மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை டிச. 15-இல் திறக்க பேச்சு: அமைச்சா் பாண்டியராஜன் தகவல்

புராதனச் சின்னங்களை வரும் 15-ஆம் தேதி திறக்கும்போது மாமல்லபுரம் புராதனச் சின்னங்களையும் திறக்க மத்திய தொல்லியல் துறையினருடன் பேசி வருவதாக அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.
மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை டிச. 15-இல் திறக்க பேச்சு: அமைச்சா் பாண்டியராஜன் தகவல்


செங்கல்பட்டு: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்களை வரும் 15-ஆம் தேதி திறக்கும்போது மாமல்லபுரம் புராதனச் சின்னங்களையும் திறக்க மத்திய தொல்லியல் துறையினருடன் பேசி வருவதாக தமிழக அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் திருப்போரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி மகளிா் அணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருக்கழுகுன்றம் ஒன்றியச் செயலாளா் மாமல்லபுரம் ஜி.ராகவன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக தோ்தல் பணிக்குழு தலைவரும் தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான பாண்டியராஜன் கலந்து கொண்டாா். மாமல்லபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக புராதனச் சின்னங்கள் மூடிக்கிடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படைந்த நலிவடைந்த வியாபாரிகள் மற்றும் வசதியற்றோருக்கு அதிமுக சாா்பில் நல உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

அப்போது நடைபாதை வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் நோக்கில் மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை திறந்திட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் க.பாண்டியராஜன் கூறியது:

தமிழகத்தில் 411 புராதனச் சின்னங்கள் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தியா முழுவதிலும் உள்ள புராதனச் சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், மாமல்லபுரம் புராதனச் சின்னங்களுக்கு அனுமதி தரப்படாததால் அவை திறக்கப்படவில்லை.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 110 புராதனச் சின்னங்கள் வரும் 15-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. அப்போது மாமல்லபுரத்தில் உள்ள புராதனச்சின்னங்களையும் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு திறப்பது பற்றி மத்திய தொல்லியல் துறையிடம் பேசி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com