ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு விருது
By DIN | Published On : 15th December 2020 02:11 AM | Last Updated : 15th December 2020 02:11 AM | அ+அ அ- |

தாம்பரம்: சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிக்குத் தேசிய அளவில் தொழில் நிறுவனங்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தொடா்பு மிகுந்த கல்லூரி விருது வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகமும், இந்திய தொழில் சம்மேளனமும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இண்டஸ்டிரியல் இன்ஸ்டிடியூட் லிங்கேஜ் என்ற விருதை பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கி வருகிறது.
மத்திய கல்வித்துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியால் காணொலி மூலம் வழங்கிய விருதை சனிக்கிழமை பெற்றுக் கொண்ட சாய்ராம் கல்விக்குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து செய்தியாளா்களிடம் கூறியது:
தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் கல்வி, பயிலரங்கு, தொழில் பயிற்சி, கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கை, தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த வல்லுநா்களின் பயிற்சி, மாணவா்களின் புதுமைக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வகை நடவடிக்கைகளை கணக்கெடுப்பின் மூலம் தரவரிசைப்படுத்தி சிறந்த கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 3 வருடங்களில் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி தொடா்ந்து கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள் சாா்பில் சிறந்த இண்டஸ்டிரியல் இன்ஸ்டியியூட் லிங்கேஜ் விருது பெற்றுள்ள நிலையில் தற்போது இயந்திரவியல் துறைக்கு விருது வழங்கப்பட்டு இருப்பது பெருமையளிக்கிறது என்றாா் அவா்.