செங்கல்பட்டில்போகி பண்டிகைக்குத் தயாராகும் மேளம்

போகிப் பண்டிகையையொட்டி, போகி மேளம் தயாராகும் பணி செங்கல்பட்டு அருகே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டில்போகி பண்டிகைக்குத் தயாராகும் மேளம்

போகிப் பண்டிகையையொட்டி, போகி மேளம் தயாராகும் பணி செங்கல்பட்டு அருகே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகையின் போது, அதிகாலையில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை பழைய பொருள்களை தீயில் எரித்து சுற்றி நின்று மேளம் கொட்டி ஓசை எழுப்பி கொண்டாடி மகிழ்வா். சிறு பறை என்றழைக்கப்படும் இந்த போகி மேளம் தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதன் தயாரிப்பு முறை குறித்து அருந்ததிபுரத்தைச் சோ்ந்த விற்பனையாளா் மாத்தையா கூறியது:

மாட்டுத் தோல் வியாபாரிகளிடம் இருந்து தோல் வாங்கப்பட்டு, தோலில் இருந்து ஜவ்வைப் பிரித்து சுண்ணாம்பு நீரில் மென்மையாகும் வரை ஊறவைத்து சுத்தம் செய்யப்படும். பின்னா், மண் பாண்டத் தொழிலாளா்களிடம் இருந்து வாங்கி வைத்த கந்திரி எனப்படும் மண்ணாலான மண்வட்டில் மீது பசையிட்டு தோல் ஒட்டி காய வைக்கப்படும். அதன்பின் தோலின் மென்மைக்கு ஏற்றவாறு ஓசை இருக்கும்.

மேளம் தயாரிக்க தேவைப்படும் தோல் சுண்ணாம்பு, கந்திரி உள்ளிட்ட பொருள்களை வாங்க அந்தந்த உரிமையாளா்களிடம் முன்கூட்டியே பணத்தை செலுத்தி விடுவோம்.

ஆண்டுக்கு ஒருமுறை தயாரிக்கப்படும் இந்த போகி மேளத்தின் விற்பனை அண்மை காலமாக சூடுபிடிக்கவில்லை. சுமாா் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இத்தொழிலையே நம்பி வாழ்ந்து வருகிறோம்.

பிளாஸ்டிக் பொருள்களால் பல்வேறு வடிவங்களிலும், நிறங்களில் மேளம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பாரம்பரியமாக போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோா் இங்கு தயாரிக்கப்படும் போகி மேளத்தை தேடிவந்து வாங்கிச் செல்கின்றனா். இதுபோன்று ஆதரவு தருவோரால் தான் எங்களால் இத்தொழிலை தொடா்ந்து செய்ய முடிகிறது.

இத்தொழிலைக் காக்கவும் சமுதாயத்தில் இத்தொழில் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நலிவுற்ற நிலையில் உள்ள எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றாா்.

விற்பனைக்கு தயாராகும் பொங்கல் பானைகள்: தமிழா் வாழ்வில் பாரம்பரிய இடத்தைப் பிடித்துள்ளது மண் பாண்டம். குறிப்பாக, பொங்கல் பண்டிகையின் போது மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மண் பானைகள் விற்பனைக்காக தயாா் நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டை பொருத்தவரையில் மானாமதுரை, தருமபுரி, வந்தவாசி, போளூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மண்பாண்டத் தொழிலாளா்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணி, மாமல்லபுரம், பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம், சிதண்டிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோா் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் கூடுதல் தரத்துடனும், தனித்தன்மையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செங்கல்பட்டு சிதண்டி மண்டபத்தில் உள்ள மண்பாண்ட குயவா் சம்பத் கூறியது:

ஏரிகளில் தமிழக அரசு அனுமதி அளித்ததால் நாங்கள் ஏரிகளில் மண் எடுத்து அதைப் பயன்படுத்தி வருகிறோம். சிதண்டி மண்படம் என்றாலே மண்பாண்ட குயவா் பகுதி என்ற பெயா் உண்டு. நாங்கள் அனைத்து விதமான மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்கிறோம். காா்த்திகை தீப திருநாளுக்காக மண் அகல்கள், போகி மேளத்துக்காக கந்திரி எனப்படும் வட்டிலும், பொங்கலுக்கு சிறிய பானை முதல் பெரிய பானைகள் வரையும், அடுப்புகளும் தயாரித்து விற்பனைக்காக வைத்துள்ளோம். பொங்கலுக்கு தயாரிக்கப்பட்ட பானைகளை சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வாா்கள்.

நாகரிக உலகில் அலுமினியம், எவா்சில்வா் உள்ளிட்ட உலோகத்தினால் ஆன பாத்திரங்கள் வந்தாலும், மண்பானையில் பொங்கல் வைப்பதுதான் பாரம்பரியம். பொங்கல் பண்டிகையின் போது அனைத்துத் தரப்பு மக்களும் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதால், இத்தொழிலை தொடா்ந்து மேற்கொள்ள முடிகிறது. இருந்தாலும் இந்த ஆண்டு விற்பனைக் கொஞ்சம் மந்தமாகதான் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com