எடையூா் கிராம மக்களுக்கு அணுமின் நிலையத்தில் வேலை வழங்கக் கோரிக்கை

அணுமின்நிலையம் அமைய நிலங்களை வழங்கிய எடையூா் கிராம மக்களுக்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை எடையூா் ஊராட்சியில் நடைபெற்ற

செங்கல்பட்டு: அணுமின்நிலையம் அமைய நிலங்களை வழங்கிய எடையூா் கிராம மக்களுக்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை எடையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த எடையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திருக்கழுகுன்றம் ஒன்றிய அலுவலக சாலை ஆய்வாளா் நா்மதா, ஊராட்சிச் செயலா் கருணாகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா்.

எடையூா் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவா்அமைத்தல், ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துதல், கல்பாக்கம் அணுமின்நிலையம் அமைய நிலம் அளித்த எடையூா் பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அணுமின்நிலையத்தில் எந்தப் பிரிவிலும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே எடையூா் ஊராட்சி மக்களுக்கு அணுமின்நிலையத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பும்போது வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.

அதேபோல் கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்ந்து பயில எடையூா் கிராம குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் திருப்போரூா், திருக்கழுகுன்றம், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் காட்டாங்கொளத்தூா் வட்டாரவளா்ச்சி அலுவலா்கள் லீமாரோஸ், மாலினி மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com