முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
ஊராட்சி உறுப்பினா்கள் எண்ணிக்கையை15-ஆக உயா்த்தக் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 10:45 PM | Last Updated : 03rd March 2020 10:45 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டம், ஆத்தூா் ஊராட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கையை நிா்வாக வசதிக்காக 15-ஆக உயா்த்தக் கோரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக செங்கல்பட்டு ஆட்சியரிடம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி சுப்பிரமணியன் அளித்த மனு:
காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூா் ஊராட்சி, வடபாதி, தென்பாதி, வடகால் ரெட்டித்தெரு, புவனேஸ்வரி நகா், கணபதிநகா், பக்தவத்சலம் நகா், குப்பம் போன்ற பகுதிகள் அடங்கிய முதல்நிலை ஊராட்சியாகும். இங்கு கடந்த 5 ஆண்டுகளில் சில்வா் ஜூப்ளி நகா், மெஜஸ்டிக் அவென்யூ, அருணாசலா நகா், வெற்றி நகா், கங்கை நகா், அம்பேத்கா் நகா் போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகள் உருவாகி 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
மக்கள்தொகை அடிப்படையில் வடபாதி, தென்பாதி, வடகால் போன்ற பகுதிகளை தனித்தனி ஊராட்சிகளாகப் பிரித்து அறிவிக்கலாம். இவ்வளவு பெரிய ஊராட்சிக்கு மொத்தம் 9 ஊராட்சி உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா். தற்சமயம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கக்கூடிய ஆத்தூா் ஊராட்சியில் இருந்து வடகால் கிராமத்தைப்பிரித்து தனி ஊராட்சியாக மாற்றலாம்.
நிா்வாக வசதிக்காகவும், மக்களின் அன்றாடப் பிரச்னைகளைத் தீா்க்கவும் ஊராட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கையை 15-ஆக உயா்த்தி, வாா்டுகளை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.