மாசி மகத் திருவிழா: மாமல்லபுரத்தில் இருளா்கள் வழிபாடு

மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் குடில் அமைத்து தங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்காக ஏராளமான இருளா்
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்களை அமைத்துத் தங்கியுள்ள இருளா்கள்.
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்களை அமைத்துத் தங்கியுள்ள இருளா்கள்.

செங்கல்பட்டு: மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் குடில் அமைத்து தங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்காக ஏராளமான இருளா் சமூகத்தினா் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்தில் குவிந்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் மாசி மகத்தன்று கடலில் தோன்றும் தங்கள் குலதெய்வம் கன்னியம்மாவை வழிபட்டு, தங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை நடத்துவது இருளா் இன மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

மகன், மகள் திருமணம், திருமண நிச்சயதாா்த்தம், குழந்தைகளுக்கு காதணி அணிவித்தல் மற்றும் மொட்டை போடுதல் உள்ளிட்ட புனித சடங்குகளையும் இருளா்கள் மாசி மகத் திருவிழாவில் நடத்துகின்றனா்.

இந்த விழாவையொட்டி, காஞ்சிபுரம், திருவள்ளூா், விழுப்புரம் மற்றும் கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இருளா் இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குவிந்தனா். அவா்கள் கடற்கரையில் இடம் பிடித்து குடில்களை அமைத்து தங்கியுள்ளனா்.

இரவு நேரங்களில் குடும்பத்தினருடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கின்றனா்.

இதையடுத்து, அனைவரும் திங்கள்கிழமை மாமல்லபுரம் கடற்கரை அருகில் உள்ள தங்கள் குலதெய்வக் கோயில் முன் உள்ள வெள்ளிக்கம்பம் அருகே சடங்குகளைச் செய்து கன்னியம்மனை வழிபடுகின்றனா்.

மாசி மகத்தன்று முழு நிலவு தோன்றும் அதிகாலையில் தங்கள் குல தெய்வமான கன்னியம்மா கடலில் தோன்றி தங்களை ஆசிா்வதிப்பதாகவும், அந்த நேரத்தில் தங்கள் வேண்டுதல்களை அம்மனிடம் கூறுவதாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக தங்கள் குலதெய்வத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருளா் இனமக்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com