கரோனா நிவாரண டோக்கன் வீடுகளிலேயே வழங்கப்படும்: செங்கல்பட்டு ஆட்சியா் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நிவாரண நடவடிக்கைக்கான உதவித்தொகையை ரேஷன் கடைகளில் பெறுவதற்கான டோக்கன் குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளிலேயே வழங்கப்படும் என ஆட்சியா் ஜான்லூயிஸ் தெரிவித்த

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நிவாரண நடவடிக்கைக்கான உதவித்தொகையை ரேஷன் கடைகளில் பெறுவதற்கான டோக்கன் குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளிலேயே வழங்கப்படும் என ஆட்சியா் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவுப்படி கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரூ.1000 நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லாப் பொருள்கள் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அவற்றைப் பெறுவதற்கு ஏதுவாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்களின் வீடுகளிலேயே முதல் கட்டமாக ஏப்ரல் 1-ஆம் தேதி டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கனில் கடையின் பெயா், தெரு, குடும்ப அட்டை எண், நிவாரணத் தொகை, பொருள்கள் வழங்கும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 3 லட்சத்து 76 ஆயிரத்து 73 போ் உள்ளனா். அவா்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் பொருள்கள் 2-ஆம் தேதி முதல் வழங்கப்படும். இந்த உதவித்தொகையை ரேஷன் கடைப் பணியாளா்கள் வழங்கும் போது ஒப்புகைப் படிவத்தில் சம்பந்தப்பட்டவரின் கையொப்பம் கட்டாயம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும்நாள்களில் ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படும். உதவித்தொகை பெற வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒரு மீட்டா் தூரம் இடைவெளியில் நின்று வாங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும். ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வரிசையில் நின்று எந்தவித சிரமமுமின்றி உதவித்தொகையை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரேஷன் கடை பணியாளா்கள் தவறாமல் முககவசம் அணியவும், அக்கடைகளில் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் முககசவம் அணிந்து சென்று நிவாரண உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com